ஆபத்து வீட்டின் கதவை தட்டும் வரை (இன்றைய சிந்தனைக்கு)

அந்தக் குடும்பம்  மிக வசதியான பணக்கார குடும்பம்.  ஆடம்பரத்திற்கும் வசதிகளுக்கும்  அளவே இல்லை.  செல்வமும் செழிப்பும் நிறைந்திருந்தது.  எப்போதும் கூத்தும் கும்மாளமும் தான். நண்பர்களுக்கு பார்ட்டி உறவினர்களுக்கு விருந்து என அந்தக் குடும்பத்திலுள்ள எல்லோருமே மகிழ்ச்சியில் கொண்டாடினர்.  கடவுளை மறந்து போன அவர்களின் வாழ்க்கையில், அந்த ஒரு நாளில் நடந்த நிகழ்வு அவர்களின் வாழ்க்கையிலே பேரிடியாக அமைந்தது. அவர்களின் மகன் கேளிக்கை விடுதியில்  நண்பர்களோடு  மது விருந்து கொண்டாடிய போது,  அதிலிருந்த ஒருவன் மூலமாக கொரோனா தொற்று, அவனுக்கு வர, அதை அறியாத அவனும் வழக்கம் போல வீட்டில் இருந்து வந்தான்.  

நாட்கள் சில செல்ல கொரோனாவின் அறிகுறி தென்பட ஆரம்பித்தது. அதற்குள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று பற்றிக் கொண்டது.  குடும்பத்தில் உள்ள அனைவரும் மருத்துவ மனையின் படுக்கையில் ஆபத்தின் விளிம்பில் இருந்தனர்.  அப்போது தான் அவர்களுக்கு கடவுளை பற்றிய எண்ணமே வந்தது. கதறினார்கள்.  அழுதார்கள். ஆபத்தான நிலையில் இருந்த குடும்பத் தலைவன் நோய் முற்றிய நிலையில்  மரித்துப் போனார்.  குடும்பமே நிலை குலைந்தது. இன்பத்தில் இறைவனை மறந்த அவர்கள், தங்கள் துன்பத்தில் இறைவனைத் தேடினர்.  

பலர் இன்று தங்கள் ஆடம்பர மோகத்தில் களித்து, இறைவனை மறந்து வாழ்கின்றனர்.  தெய்வ பயமின்றி "வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதற்கே" என்ற நோக்கோடு எல்லை மீறிச் செல்கின்றனர்.  இறைவனைப் பற்றிய நினைவுகள் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை, ஆபத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டும் வரை. 

"ஆண்டவரின் தீர்ப்பு வருமுன் உன்னையே ஆராய்ந்து பார்; கடவுள் சந்திக்க வரும் நாளில் நீ மன்னிப்பு பெறுவாய். நோய்வாய்ப்படுமுன் உன்னையே தாழ்த்திடு; பாவம் செய்தபின் மனந்திரும்பு. நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில் செலுத்த எதுவும் தடையாய் இருக்க வேண்டாம்; அதை நிறைவேற்ற இறக்கும்வரையில் நீ காத்திருக்கவேண்டாம். நேர்ச்சை செய்யுமுன் அதைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்துகொள்; இதில் ஆண்டவரைச் சோதிப்பவனாய் இருந்துவிடாதே. இறுதி நாளில் வரவிருக்கும் அவரது சீற்றத்தை நினைவில் கொள்; அவர் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு பழிவாங்கும் நேரத்தையும் எண்ணிப்பார். நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார். காலை தொடங்கி மாலைக்குள் காலங்கள் மாறுகின்றன; ஆண்டவர் திருமுன் அனைத்தும் விரைகின்றன".                                                                                                                                                           (சீராக் 18 : 20 - 26 )

"ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.
கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்."  (எசாயா 55 : 6 -7)

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))