விடியும் வரைக் காத்திருப்போம் (தமிழ் கவிதை)

 விடியும் வரையில்   காத்திருப்போம் 
      விடியல்   நிச்சயம்  இருக்கும் 
கூடிடும்    இருளையும்   தாண்டி 
       குதித்துவரும்  விடியல்  நமக்காய் 

உழைத்துக்   களைத்தோம்  நாமும் 
     உரிமையை   இழந்து  தவித்தோம் 
பிழைத்துப்   போகும்  வாழ்வில் 
     பிணைகள்    இருக்கக்  கண்டோம்

சவால்கள்    பலவும்    நம்மிடம் 
     சாதனை    ஆக்கும்  வழியுண்டு 
அவாள்கள்    ஆயிரம்   கெடுத்தும் 
     ஆதவனைப்   போல்   எழுவோம் 

நீதியைக்    கொல்வோர்  முன்னால்
    நியாயம்   என்றும்  எடுபடுவதில்லை
சதியால்    ஒடுக்கிடும்  சண்டாளர் 
    சடையைப்   பிடித்து  உலுக்கணும்

விடியல்   நமக்கும்  உண்டு  
    வீணர்கள்  ஓயும்  காலத்தில் 
ஆடிய    ஆட்டங்கள்  யாவும் 
    ஆண்டவனால்  அடங்கிப் போகும் 

காத்திருப்போம்  காலம்  கனியும்வரை
     காப்பவரின்    கருணை  நோக்கியே 
ஆத்திரத்தை   அடக்கியே   சுயத்தை 
     ஆண்டிட    வேண்டுவோம் முதலில் 

நிச்சயம்    நிம்மதி  கிடைக்கும் 
    நீதியும்  நியாயமும்  தழைக்கும்
அச்சப்படத்  தேவையன்று  நமக்கு
    ஆண்டவர்  துணையுண்டு   என்றும்

ஒடுக்குவோரைக்  கண்டு  நாமும் 
    ஓடியோடிக்    கலைத்தது  போதும் 
மிடுக்குடன்    அவரை   எதிர்கொள்ள 
    மீட்பரின்   பெருந்துணை   உதவிடும் 

சோர்ந்திட   வேண்டா   சோதனையில் 
     சளைத்திட   வேண்டா  வேதனையில்
தேர்ந்தவர்     நம்மைக்    காண்கையில்
     தேவையில்லாக்   கவலை  எதற்கு?

துன்பம்   ஒருகாலம்   உண்டெனில் 
     துள்ளிக்   குதிக்கும்   காலமுமுண்டு 
இன்பம்    நமக்குக்    கொடுக்கையில் 
     இறைவனைத்   தடுக்க   எவருண்டு?

ஆண்டுகள்  பலவும்   கடந்தாலும் 
    ஆண்டவரில்  நம்பிக்கை  நமக்குண்டு 
மீண்டெழும்   காலம்   வரையிலும் 
    மீட்புக்காக    காத்து   இருப்போம்  

நீதியின்    கதிரவன்    நம்மீது 
    நிலைத்து    ஒளிவீசச்   செய்வார் 
விதியென்று   எதுவும்  இல்லை  
    விடியலைத்  தேடிக்   காத்திருப்போம் 

தோல்விகள்    வெற்றியின்  படிகள்
     தொடர்ந்து  நாமும்  பயணிப்போம் 
பல்வினைக்   காரணி   சூழ்ந்தாலும் 
     பரத்திலிருந்து   வெற்றி   வரும். 

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))