அழிவுக்குக் கொண்டு செல்லும் ஆராய்ச்சிகள்

 அவன் ஒரு ஏழை மனிதன்.  பல நாட்கள் அவன் வருந்தி உழைத்தத்தைக் கருதி, ஒரு தேவதை அவன் முன் தோன்றி, அவனுக்கு ஒரு மந்திரப் புறாவைப் பரிசாக அளித்து விட்டு மறைந்து போனது. அவனும் அந்த மந்திர புறாவிற்கு உணவூட்டி சீராட்டி வந்தான். நாட்கள் பல சென்றதும், அந்த மந்திரப் புறா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தங்க முட்டைகளை இட்டு வந்தது.  முதலில் இயல்பாக இருந்த மனிதனும் தனது பேராசையின் மிகுதியால், புறாவிற்கு அதிகமான உணவு கொடுத்தான்.  முடிந்தவரை புறாவும் தின்று, இரண்டு முட்டைகளை இட்டது. இரண்டு நான்காக, எட்டாக, பேராசை மனிதனுக்கு இன்னும் கூடியது.  தினமும் இருபது பொன் முட்டைகளை இடும் வரை புறாவிற்கு வலுக்கட்டாயமாக உணவைத் திணித்தான்.  இதை போல் இன்னொரு புறா இருந்தால் இன்னும் அதிக பொன் முட்டைகள் கிடைக்குமே என்று நினைத்து, அந்த புறாவொடு சாதாரணப் புறாவைக் கலக்கச் செய்தான்.
நாளடைவில் அந்தப் புறாவும் சில முட்டைகளைப் பொறித்து குஞ்சுகளாக்கியது.  குஞ்சுகள் சீக்கிரம் வளர்வதற்காக,  மருந்துகள் கலந்த உணவைக் கொடுத்தான்.  சில மடிந்து போயின, சில உடல் ஊனமாயின.  பேராசை  அந்த மனிதனை இன்னும் விட்டுவைக்கவில்லை. ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்தான்.  பல்வேறு ஆராய்ச்சிகளை அவன் செய்ததனால், மந்திரப்  புறாவும் அதன் குஞ்சுகளும் மடிந்து போயின. 

தேவதை என்பது இந்த உலகம் மற்றும் பிரபஞ்சம்.  மந்திரப் புறா என்பது உலகின் இயற்கை வளங்கள்.  சாதாரணப் புறா என்பது மனிதனால் செயற்கையாய் உண்டாக்கப்பட்டவை. 

இன்றைய உலகத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிரிருக்கின்றன, இயற்பியல் துறையில், வேதியியல் துறையில், மருத்துவ துறையில், விண்வெளி ஆராய்ச்சியில், தகவல் தொழில் நுட்ப துறையில் என இன்னும் பல. ஒரு பக்கம் ஆக்க வேலைகளுக்காக ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் இன்னொரு பக்கம் அழிவு சக்திக்கு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆக்க சக்திக்கான அணு ஆராய்ச்சியும், நோய் கண்டறிவதற்கான நுண்ணுயிர் ஆராய்ச்சியும் இன்று அழிவு சக்திகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.  ஒருபுறம் கணினியை காப்பதற்கு மென்பொருள் தயாரிக்கப்படும் பொழுது, இன்னொரு புறம் கணினியையும், மென்பொருள் தகவல்களையும்  அழிப்பதற்கும், திருடுவதற்கும் மென்பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன.  

ஒருபுறம் நோய்க்கான மருந்துகள் ஆராய்ச்சி நடக்கும் போது இன்னொரு புறம்
நோய்களை ஏற்படுத்த கூடிய நுண்ணுயிர் மற்றும் வேதியியல் காரணிகள் உருவாக்கப்படுகின்றன.  முன்னேற்றப்பாதை என்ற பெயரில் அழிவுக்கான பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. மனிதனுக்குத் தேவையானது  உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம். ஆனால் இவற்றைத் தவிர்த்து தேவையற்ற பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இந்த உலகினை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.  இதற்கு நானும் நீங்களும் உடந்தையாகின்றோம்.

"ஆண்;டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.
உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே; உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.
உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.
உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே; ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.
மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது; தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன."   (சீராக் 3:20-24)

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))