பொறாமை பொல்லாங்கும் செய்யும் (இன்றைய சிந்தனைக்கு)

மார்க் ஒரு நிதி நிறுவனத்தில் காசாளராக பணி புரிபவர்.  மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு ஒரு நடுத்தரமான சொந்த வீட்டில் வசித்து வந்தார்.  பல ஆண்டுகளாக அவர் வீட்டின் அருகில் காலியாக இருந்த அந்த வீட்டிற்கு ஒரு குடும்பம் வந்து குடியேறியது.  அந்த வீடு ஒரு கார்பொரேட் நிறுவனத்தின் பங்களா.  பீட்டர் என்பவர் குடும்பத்தோடு அந்த வீட்டிற்கு குறைவான பொருட்களோடு வந்து இறங்கினார்.  பீட்டர் அந்த கார்பொரேட் நிறுவனத்திற்கு அந்த ஊரின் புதிய கிளைக்கு  மேலாளராக பணி மாற்றம் செய்யப் பட்டிருந்தார். மார்க்கை விட பீட்டருக்கு சற்று சம்பளம் அதிகம்.  ஒருவரை ஒருவர் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.  மார்க்கும் பீட்டரும் ஒரே கல்வி தகுதி என்றாலும் மார்க்கை விட பீட்டர் பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் கூடுதல் வருமானத்தில் இருந்தது மாற்குவிற்கு சற்று பொறாமையை உண்டு பண்ணியது.  இதை விட கூடுதலாக தாழ்வு மனப்பான்மை உண்டாகியது. எனவே பீட்டருக்கு முன்னால், தன்னை உயர்த்தி காட்டி கொள்ள விரும்பினார். ஒவ்வொரு நாளும் பீட்டர் வீட்டுக்கு புதிது புதிதாக வீட்டு தளவாடங்கள், அடுப்பறை உபகரணங்கள், வீட்டு உபயோக, மின்சாதனங்கள், மின்னணு சாதனங்கள் என்று வந்து இறங்கின. இதைப் பார்த்த மாற்குவின் மனதில் போட்டி மனப்பான்மை உருவாகியது.  மார்க்கும் புதிது புதிதாக சாமான்களை கடனில் வாங்கி வீட்டில் குவித்தார்.  கடன் சுமை அதிகமாக வட்டிக்கே, வருமானத்தில் பெரும் பங்கு போனது. குடும்பத்தின் அத்தியாவசிய தேவையின் அளவைக் குறைத்துக் கொண்டார். சில நேரங்களில்  பணத்தேவை அதிகரிக்க, அலுவலக பணத்திலிருந்து சிறிது சிறிதாக கையாடல் செய்ய ஆரம்பித்தார்.  ஒரு ஆண்டு கழித்து, அவர் அலுவலகத்தில் நடந்த தணிக்கையில் மார்க் கையாடல் செய்தது அம்பலம் ஆனது.  அவரின் குடும்ப சூழ்நிலை கருதி நிறுவனமும் மன்னித்து எடுத்த பணத்தை  விரைவில் கட்டிவிடுமாறு சொல்லி எச்சரித்து வேலையில் வைத்துக் கொண்டது.  புதிதாக வாங்கிய பொருட்களை எல்லாம் அதை விட குறைந்த விலைக்கு விற்று அலுவலகத்தில் பணத்தைக் கட்டினார்.  கடன் சுமையில் சிக்கனமாக குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை.  திடீரென்று இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள், பீட்டர் பணி மாறுதல் காரணமாக குடும்பத்தோடு வெளியூர் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். முதல் நாள் அவர் கொண்டு வந்த சாமான்கள் மட்டுமே வண்டியில் ஏற்றப்பட்டன.  என்னவென்று மார்க் சென்று விசாரிக்க, புதிது புதிதாக இறங்கிய சாமான்கள் அனைத்தும் அந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும் அடுத்து வரும் மேலாளருக்கு விட்டு செல்ல வேண்டும் எனத் தெரிந்து கொண்டார்.  பொறாமையிலும் போட்டி மனப்பான்மையிலும் தான் செய்த தவறை எண்ணி நோவதைத் தவிர மார்க்குக்கு வழியில்லை. 

"சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?".  (நீதிமொழிகள் 27:4)

"ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு. (நீதிமொழிகள் 13:7)  

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))