தவறான புரிதலா? புரிதலில் தவறா? (இன்றைய சிந்தனைக்கு)

 ஜேக்கப் மற்றும் டெய்சி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இரண்டு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு திருமணத்திற்குப் பின்னும் காதலித்தனர். அவர்களின் அன்புக்கு சாட்சியாக ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்காக செல்வம் சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஜேக்கப் விருப்பப்படியே டெய்சியும் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தாள்.  குழந்தைக்கென ஆரம்பித்த அவர்களின் நோக்கம் பின்பு ஆடம்பரத்தில் முடிந்தது.  இருவரும் போட்டிபோட்டு கொண்டு வருமானத்திற்கு மிஞ்சி செலவு செய்தனர்.  பல பொருட்களை கடனுக்கு வாங்கி குவித்தனர்.  திடீரென்று ஒருநாள் ஜேக்கப் வேலை பார்த்த அலுவலகம் நஷ்டத்தில் முடங்கி போனது. ஜேக்கப் வேலை இழந்தான்.  மாதங்கள் சில கடந்தன.  ஜேக்கப் பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. அந்தஸ்திற்கு குறைவான வேலையில் சேரவும் மனம் விரும்பவில்லை. 

நாட்கள் செல்ல செல்ல, ஜேக்கப் மற்றும் டெய்சி இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விரிசல் விரிவடைந்தது.  தினமும் கூச்சல், வாக்குவாதம் சச்சரவு என அவர்களின் அன்பு குழந்தையின் முன்பாக எல்லாம் நடந்தது.  அது குழந்தையின் மனதை வெகுவாய் பாதித்தது. எந்தக் குழந்தைக்காக முதலில் சம்பாதிக்க நினைத்தார்களோ. அந்த குழந்தையைக் கவனிப்பதில் இருவருக்கும் விருப்பமில்லை.  முடிவில் அந்தக் குழந்தையை வேறு ஒரு ஊரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்தார்கள்.  கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் முற்றவே, இருவரும் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை அணுகினர். அவர்களைப்  பார்த்து வளர்ந்த குழந்தைக்கு தவறான ஒரு பாடத்தை காட்டி விட்டனர்.

புரிந்து கொள்ளுதல் மூன்று வகையிலானது.  
முதல் வகைப் புரிதல் என்பது, தன் நிலையிலிருந்து தன் உணர்வுகளின் அல்லது தனது அபிப்ராயத்தை ஒட்டிப் பிறரைப்  புரிந்து கொள்வது.
இதில் பலர் தவறு செய்வார்கள். ஒன்று தவறாகப் புரிந்து கொள்ளுதல் (misunderstanding) அல்லது புரிதலில் தவறுதல் (missing of understanding)
இரண்டாவது வகைப் புரிதல் என்பது அடுத்தவரின் நிலையிலிருந்து, அவர்களின் உணர்வுகளின் அல்லது அபிப்ராயத்தை ஒட்டிப் பிறரைப் புரிந்து கொள்வது.
மூன்றாவது, ஆங்கிலத்தில் HALO EFFECT என்பார்கள். அதாவது, ஒருவரின் ஒரே ஒரு குணத்தின் அடிப்படையிலோ அல்லது சந்தர்ப்பத்தில் நடக்கும் ஒரு நிகழ்வின் அடிப்படையிலோ வைத்து ஒருவரைப் புரிந்து கொள்ளுதல்.  இது மிக மிகத் தவறான ஒரு அணுகுமுறை. 

பெரும்பாலான நேரங்களில், தவறான புரிதல்களில்(misunderstanding) நீண்ட கால சந்தேகங்கள் (Long term Doubts) மற்றும் தாழ்வுமனப்பான்மை (inferiority complex), பொறுப்பை தட்டிக் கழிக்கும் எண்ணம் (Escapism) காரணிகளாக அமைகின்றன.
புரிதல் தவறுகளில் (Missing of Understanding), அகங்காரம்(Ego), உயர்வு மனப்பான்மை (Superiority Complex), மூன்றாம் நபர்களின் புறணிகள், தூண்டுதல்கள் (Gossips and Ignition or inducing), அலை பாயும் எண்ணம் (Look for better) காரணிகளாக அமைகின்றன. 

இதனால் பல தம்பதிகள் பிரிந்து தனி தனி வாழ்கையாகவோ அல்லது வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொள்கின்றனர். இவர்களைப் பார்த்து வளரும் சந்ததியும் இவர்களைப் போலவே ஆகின்றன. இது பரம்பரையாக வரும் நோய்! ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "Worship the difference" அதாவது வேறுபாடுகளை வழிபடுங்கள்.  வேறுபாடுகளை கொண்டாட முடியவில்லை என்றாலும், வேறுபாடுகளை சகித்துக் கொள்ளுங்கள் உங்கள் தலைமுறைக்காக. 

"நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.
"இதற்குக் காரணம் யாது?” என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே; உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.
உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.
ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். “மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.                                                                                                                                                    (மலாக்கி 13 : 16 )
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.

Comments

Popular posts from this blog

புதிய குறள் - திருக்குறள் வடிவில்

Songs of Praise (English Poetry) - Part 5 (Faith)

பயன்படுத்தும் இறைவா எனை ((தமிழ் கவிதை))